தென்மேற்கு வங்கக்கடலில், இலங்கையை ஒட்டி நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்றும் அங்கேயே நீடிக்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும். அதேசமயம், வரும் 22-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாக உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெறும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.
இதன் விளைவாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவையிலும் ஒரு வாரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேசமயம், இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய 8 தென்மாவட்டங்களில் கனமழையும், திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகளில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று காலை முதல் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. வில்லிவாக்கம், அண்ணாநகர், கொரட்டூர், ஆவடி, அம்பத்தூர், திருமுல்லைவாயல், பட்டாபிராம், திருநின்றவூர், மதுரவாயல், மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் மாலையில் மிதமான மழை பெய்தது. இதனால், வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரிக்குச் சென்ற திரும்புவோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
வடசென்னையின் பெரம்பூர்,புளியந்தோப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. காலை முதல் லேசான வெயில் அடித்து வந்த நிலையில் மாலையில் திடீரென பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
(குற்றாலம் – தென்காசி)
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர் மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் நேரடி விதைப்பு செய்து 25 நாட்களுக்கு மேல் ஆகிறது. இந்நிலையில் இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால், பல இடங்களில் நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கத் துவங்கியுள்ளன. இன்னும் ஓரிரு தினங்கள் மழை நீடித்தால், பயிர்கள் முற்றிலுமாக அழுகிவிடும் என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
























