புதுச்சேரியில் எஸ்.ஐ.ஆர் பணிகள் முடிவுற்ற நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலை, தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது. ஏற்கனவே இடம்பெற்றிருந்தவர்களில், 10 சதவீதம் பேரின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை போலவே, புதுச்சேரியிலும் நவம்பர் 4-ஆம் தேதி, எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் துவங்கியது. புதுச்சேரி, காரைக்கால், மாஹி, ஏனாம் என, 4 பிராந்தியத்திலும் நடைபெற்ற பணிகள், தற்போது நிறைவு பெற்றிருக்கிறது. இதையடுத்து, வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், இன்று வெளியிட்டார். மொத்தம் 7 லட்சத்து 64 ஆயிரம் பேர், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
85 ஆயிரத்து 531 பேர், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதாவது, மொத்த வாக்காளர்களில், 10 புள்ளி பூஜ்யம் 4 சதவீதம் பேர், நீக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவு என்ற அடிப்படையில், 10 சதவீதம் பேர் நீக்கப்பட்டுள்ளதாக, தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
























