100 நாட்கள் வேலை உத்தரவாதம் என்று சட்டம் இருந்தபோதே, பிஜேபி ஆட்சியில் மக்களுக்கு 20 முதல் 25 நாட்கள் மட்டுமே வேலை கிடைத்தது என, தனது எக்ஸ் வலைதள பதிவில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கான ஊதியத் தொகையையும், திட்டச் செலவையும் மாதக் கணக்கில் விடுவிக்காமல் வஞ்சித்தனர். அந்த நிலுவைத் தொகையையும் நாம் போராடிப் பெற வேண்டிய அவலம்தான் இருந்தது என்றும் கூறியுள்ளார்.
தற்போது, மத்திய அரசின் விருப்பத்தின் பேரில் அதிகாரிகள் விரும்பினால், வேலை வழங்கலாம் என்று, விதிகள் மாற்றப்பட்ட பிறகு, ஓரிரு நாட்கள் வேலை கிடைப்பதே அரிதாகப் போகிறது. நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு பேரிழப்பைச் சந்திக்கப் போகிறது என்றும் ஸ்டாலின் அச்சம் தெரிவித்துள்ளார்.
திட்டச் செலவில் 40 சதவீத தொகையை மாநிலங்கள் ஏற்க வேண்டும் என்ற நிபந்தனை, ஜி.எஸ்.டி வரி மாற்றங்களுக்குப் பிறகு, கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வரும், மாநில அரசுகளுக்குத் தரப்படும் சுமை, தண்டனை என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
கிராமப்புறப் பெண்கள், ஏழை விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றி வந்த திட்டத்துக்கு மூடுவிழா நடத்துவதற்குத் திருவாளர் பழனிசாமி அவர்கள், வரவேற்புப் பத்திரம் வாசிப்பது மன்னிக்க முடியாத பச்சைத் துரோகம் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

























