தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வருகை தந்த தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் காரமடை அரங்கநாதர் கோவிலுக்கு வழிபாடு செய்த பின்னர் தேரம்பாளையம் கிராமத்திற்கு வந்து அங்கு கூடியிருந்த மக்களின் கோரிக்கைகளை கேட்டு மனுக்களை பெற்று பதிலளித்து பேசினார்.
தேரம்பாளையம் கிராம கோவில் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் விவசாயிகள், நெசவாளர்கள், சமூகநல இயக்கங்கள், சமுதாய தலைவர்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்று கொண்டார்.
இதன் பின்னர் கூட்டத்தில் பேசிய நயினார் நாகேந்திரன், “விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப மேட்டுப்பாளையம் கறிவேப்பிலைக்கு விரைவில் புவிசார் குறியீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், நெசவு தொழிலுக்கு புகழ் பெற்ற சிறுமுகை பகுதியில் மத்திய ஜவுளி பூங்கா அமைக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்தல் நெருங்குவதால் அரசு அதிகாரிகள் தற்போதைய ஆட்சியாளர்களின் பேச்சை கேட்பதில்லை என்பதால் மாநில அரசு மூலம் நிறைவேற்றப்பட கோரிக்கைகள் அடுத்து ஆட்சியமைக்கும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான ஆட்சியில் தவறாமல் நிறைவேற்றப்படும் என்றார்..நிகழ்ச்சியில் அவருடன் அதிமுக வின் கோவை வடக்கு புறநகர் செயலாளர் பி.ஆர்.ஜி அருண்குமார் எம்எல்ஏ, பாஜக பொது செயலாளர் ஏ.பி. முருகானந்தம், பாஜக விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ், பாஜக கே.பி ராமலிங்கம், உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், விஜய் கட்சி தனது தலைமையில் தான் தேர்தலை சந்திக்கும் என்பது உங்கள் அணிக்கு பின்னடைவா என்ற கேள்விக்கு, “எங்கள் அணிக்கு எந்த பாதிப்பும் இல்லை, சொத்து வரி, குடிநீர் வரி, மின்சார கட்டணம் என அனைத்தையும் பல மடங்கு உயர்த்திய திமுக அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
வரும் சட்டமன்ற தேர்தலில் எங்களது தேசிய ஜனநாயக கூட்டணி தான் வெற்றி பெறும்..கோவை பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் என்பது இந்த ஆட்சியில் மாறியுள்ளது..கோவையில் கஞ்சா போதையில் மாணவியை மூன்று பேர் இழுத்து சென்று சீரழித்துள்ளது தமிழக முதலமைச்சரின் கீழ் உள்ள காவல்துறையின் சீரழிவை காட்டுகிறது..வரும் தேர்தலில் இவையனைத்தும் மாறும்” என்றார்.
























