கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் பிஜேபி கூட்டணிகள் வாங்கிய வாக்குகளின் அடிப்படையில் வரும் சட்டமன்றத் தேர்தலில 210 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.
அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் சென்னையை அடுத்த ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு உடல் நலம் சரியில்லாததால், தற்காலிக அவைத் தலைவராக தேர்வான கே.பி.முனுசாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
அப்போது அரசியலில் பொது எதிரியாக திமுக-வை முன்நிறுத்தி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், தமது தலைமையையும், நோக்கத்தையும் ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணிவைக்கும் அதிகாரத்தை, எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இறுதியாகப் பேசிய எடப்பாடி பழனிசாமி, பிஜேபியின் அடிமை என்ற குற்றச்சாட்டை மறுத்ததோடு, வரும் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என்றார். இதன்மூலம், கூட்டணி ஆட்சி என்ற பிஜேபியின் திட்டத்திற்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

























