அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோ போன்றவற்றை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை, தமிழக அரசு உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்தது.
கரூர் சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் அரசியல் கட்சிகள் சார்பில் நடத்தப்படும் பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், ரோடு ஷோ எனப்படும் சாலை வழியான சந்திப்புகள் போன்றவற்றை ஒழுங்குபடுத்த உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை தயார் செய்த அரசு, அதில், இடம் பெற்றுள்ள அம்சங்கள் குறித்து, கடந்த 6 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, கருத்துகளை கேட்டது. அப்போது, பொதுக்கூட்டங்களை நடத்த முன் வைப்புத்தொகை செலுத்த வேண்டும் என்ற அரசின் முடிவுக்கு அனைத்து கட்சி பிரதிநிதிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
(கார்டு)
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த து. அப்போது, வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான அறிக்கையை தமிழக அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
அப்போது, இது தொடர்பான நகலை வழக்கு தாக்கல் செய்துள்ள அதிமுக, த.வெ.க ஆகிய கட்சிகளின் மனுதாரர்களுக்கு வழங்க நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு விதியை எதிர்ப்பார்கள் என்பதால், நகலை வழங்க அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கை வரும் 27 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

























