ராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த பிளஸ்-2 மாணவி, கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மூத்த மகள் ஷாலினி, ராமேஸ்வரம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
4 நாட்களுக்கு முன்னர், முனியராஜ் என்ற இளைஞர் ஷாலினியை காதலிப்பதாக கூறி, தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து மாணவி தனது தந்தையிடம், முறையிட்டிருக்கிறார். இதையடுத்து, முனியராஜை, மாணவி ஷாலினியின் தந்தை மாரியப்பன் கண்டித்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த முனியராஜ், இன்று காலை பள்ளிக்கு சென்ற மாணவி ஷாலினியிடம் தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, மாணவியை குத்தி உள்ளார்.
இதில் நிலை குலைந்த மாணவி, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தற்போது மாணயின் உடல், பிரேத பரிசோதனைக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மாணவியை கொலை செய்த இளைஞர் முனியராஜை போலீஸார் கைது செய்திருக்கின்றனர். காதலிக்க மறுத்ததால், மாணவியை கொலை செய்ததாக முனியராஜ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

























