கல்லூரி மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணினி வழங்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் தினத்தையொட்டி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் 2025-26 ஆம் ஆண்டிற்கான மிதி வண்டிகளை துணை முதலமைச்சர் உதயநிதி மாணவர்களுக்கு வழங்கினார். மேலும், 2024-25 ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிகளுக்கான விருதுகளையும் அவர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவிலேயே கல்வியில் மிகச்சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி கொண்டிருப்பதாக தெரிவித்தார். இதை உலக அளவில் போட்டி போடும் அளவிற்கு மாணவர்கள் உயர்த்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தமிழக மாணவர்கள் அனைவரும் உயர்கல்வி பயில வேண்டும் என்பதற்காக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் ஆகிய திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இன்னும் சில மாதங்களில் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்றும் உதயநிதி தெரிவித்தார்.
























