பிரேசில் நாட்டின் பெலேம் நகரில் நடைபெற்ற, காலநிலை உச்சிமாநாட்டு அரங்கில், திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், 21 பேர் காயமடைந்தனர்.
ஐக்கிய நாடுகள் அவையின், காலநிலை மாற்ற உச்சிமாநாடு, பிரேசிலின் பெலேம் நகரில், 2 வாரங்களாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கிட்டத்தட்ட 200 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திரயாதவ் பங்கேற்றுள்ளார்.
புதைபடிவ எரிபொருட்கள், காலநிலைக்கான நிதி மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தையில், மாநாட்டின் பிரதிநிதிகள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், மாநாட்டு அரங்கில் நேற்றிரவு திடீரென தீப்பிடித்தது.
அங்கிருந்தவர்கள் அச்சம் அடைந்து ஓட்டம் பிடித்தனர். தீ விபத்தால் சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. 21 பேர் தீக்காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்திருக்கிறது.


























