புதுச்சேரி கனகசெட்டிகுளம் பகுதியில் பிம்ஸ் தனியார் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்குள்ள செவிலியர் கல்லூரியில் பயிலும் மாணவிகள் மருத்துவமனையில் பயிற்சிக்காக செல்லும்போது, அங்கு எக்ஸ்ரே பிரிவில் டெக்னீசியனாக பணிபுரியும் ஊழியர்களான திவாகர்,சரவணன் ஆகியோர் 10-க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் கல்லூரியின் உள்ளீட்டு புகார் குழுவிடம் புகார் தெரிவித்துள்ளனர். அவர்களும் விசாரணை நடத்தி, குற்றம் நடந்ததை உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால் குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை மூடி மறைக்கும் தனியார் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தும், மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர்களை பணிநீக்கம் செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக சட்டக்கல்லூரி மாணவர்கள், இந்திய மாணவர் சங்கம், மாணவர் காங்கிரஸ் உள்ளிட்ட மாணவர் அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரிகளுக்குள் நுழைந்த கல்லூரி பேருந்துகளை மாணவர்கள் மறித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
இதனால் ஊழியர்களும் பேராசிரியர்களும் கல்லூரிக்கும் நுழைய முடியவில்லை..
இதனை அடுத்து நிர்வாக தரப்பில் மாணவர்கள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது அப்பொழுது மாணவர்கள் உறுதியாக தவறு செய்தவர்கள் நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதற்கு உரிய நடவடிக்கை ஏற்கனவே எடுக்கப்பட்டதாக நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் இரண்டு வாரங்களுக்கு பள்ளி கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது .


























